கொழும்பு,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே ரன்கள் அடிக்க தடுமாறினர். கவிஷா தில்ஹாரி ஒரு முனையில் வெற்றிக்காக போராடினாலும் பிற வீராங்கனைகள் கைகொடுக்கவில்லை.
இதனால் இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை பெண்கள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.