வாஷிங்டன்: உயிரிழந்தவர்களின் குரலை அப்படியே அந்தக் குரலின் தொனி மாறாமல் மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்கும் பலே திட்டம் ஒன்றை அமேசான் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அறிவியல் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டுள்ள இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் சாத்தியம் என்பது பல்வேறு முறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன தன் மனைவியை நபர் ஒருவர் சந்தித்திருந்தார். அந்தச் செய்தி உலக அளவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில், இப்போது உயிரிழந்தவர்களின் குரலில் அலெக்சா பேச உள்ளது அதன் அடுத்த கட்டமாகவே பார்க்கப்படுகிறது.
அமேசானின் அலெக்சா குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இதுவொரு ஸ்மார்ட் ஸ்பீக்கர். இணைய இணைப்பு வசதியுடன் இயங்கி வருகிறது அலெக்சா. தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசி வருகிறது. விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது ஆகட்டும். விரும்பிய பாடலை பிளே செய்யவும். சமயங்களில் கதை சொல்லியாகவும் அலெக்சா உலக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்போது அதன் பயனர்கள் இந்த உலகில் அவர்கள் மிகவும் மிஸ் செய்யும் காலஞ்சென்ற தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம் கேட்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
“சந்தேகத்திற்கு இடமின்றி நாம் அனைவரும் Artificial Intelligence-இன் பொற்காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இங்கு நாம் காணும் கனவுகள் எல்லாம் மெய்யாகி வருகிறது. இந்த பணிக்கு சிலவற்றை நாங்கள் கண்டறிய வேண்டி இருந்தது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான துல்லியமான குரல் ஒலிப்பதிவை இதற்காக பயன்படுத்துகிறோம். இது எப்படி சாத்தியமானது என்றால் நாங்கள் குரலை அப்படியே மாற்றும் டாஸ்காக இதை உருவாக்கி உள்ளோம்” என தெரிவித்துள்ளார் அலெக்ஸாவின் தலைமை விஞ்ஞானி ரோகித் பிரசாத்.
இது குறித்து அறிந்ததும் நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வாடும் நபர்கள் தங்களிடம் அவர்களது குரல் ஒலி வடிவில் இல்லையே என வருந்தும் வகையிலான பதிவுகளை பகிர்ந்துள்ளனர். சிலரோ இது மோசடி வகைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.