சிவசேனாவில் அதிருப்தி ஏற்பட்ட சில எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே உடன் இணைந்திருப்பதால் முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்துவரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே திடீரென போர்க்கொடி எழுப்பினார். முதலில் பத்துக்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தவருக்கு தொடர்ந்து ஆதரவு பெருக ஆரம்பித்தது.
இதற்கிடையில் சிவசேனா கட்சியின் பிற மூத்த தலைவர்கள் பலரும் சூரத்திற்குச் சென்று அதிருப்தி எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முயற்சித்த பொழுது அவர்கள் அனைவரும் அங்கிருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றனர்.
மேலும் 3 சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள், கவுகாத்தியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு தனியாக சென்றனர். இது சிவசேனா கட்சியின் தலைமைக்கு கடுமையாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டே உடன் முப்பத்தி நான்கு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த எட்டு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க மொத்தமாக 42 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என்பது அவருக்கு கிடைத்திருந்தது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் முதல்வரை தங்களால் தொடர்புகொள்ள முடியாத சூழல்தான் நிலவி வந்ததாகவும், அயோத்தியா செல்வதற்கு தாங்கள் அனுமதி கேட்டபோது கூட அவர்களை அனுமதிக்காமல் முதல்வருடைய மகன் ஆதித்யா தாக்கரேவை மட்டும் செல்ல அனுமதித்ததாகவும் குறை கூறியுள்ளனர்.
இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு திரும்பிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தொடர்ந்து சிவசேனா தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருப்பதாகவும், தங்களை கடத்திக் கொண்டு சென்று விட்டதாகவும் கூறினர். அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய ஏக்நாத் ஷிண்டே தரப்பு இரு சட்டமன்ற உறுப்பினர்களும் சிரித்தபடி தங்களுடன் விமானத்தில் பயணிக்கும் புகைப்படத்தையும் உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் இடும் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.
இன்று மதியம் முதல்வர் உத்தவ் தாக்கரேவை வெறும் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே நேரில் சந்தித்திருந்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இருபதுக்கும் அதிகமான, கவுகாத்தியில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர்கள் விரைவில் மகாராஷ்டிரா மாநிலம் திரும்ப இருப்பதாகவும் கூறினர். மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும் அவர்கள் முதல்வரிடம் நேரடியாக பேச வேண்டுமென்றும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் கூட்டணியில் இருந்துகூட வெளியேற தயாராக இருப்பதாகவும் கூறினார். இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் மீண்டும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
– நிரஞ்சன் குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM