புதுடெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி வேட்பாளராக, ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரவுபதி, குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெறுவார்.
இவர் நேற்று காலை ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ராய்ரங்பூர் என்ற பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றார். அங்கு வழிபடுவதற்கு முன் கோயிலை தானே பெருக்கி சுத்தம் செய்தார்.
திரவுபதி முர்மு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘கொள்கை விஷயங்களில் திரவுபதி முர்முக்கு உள்ள புரிதல் மற்றும் அவரது இரக்க குணம் நாட்டுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். திரவுபதி முர்மு தனது வாழ்க்கையை சமூகத்துக்கு சேவை செய்வதற்காகவும், ஏழைகளின் முன்னேற்றத்துக்காகவும் அர்ப்பணித்தவர். அவர் மிகச்சிறந்த ஆட்சி நிர்வாக அனுபவம் கொண்டவர். நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக அவர் இருப்பார் என உறுதியாக நம்புகிறேன். ஏழ்மையையும், கஷ்டங்களையும் அனுபவித்த கோடிக்கணக்கான மக்கள் திரவுபதி முர்முவின் வாழ்க்கையில் இருந்து மிகச் சிறந்த பலத்தை பெறுகின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில், திரவுபதி முர்முவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதில் பதிவாகும் ஓட்டுகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.