ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் எழுந்துள்ள சூழலில், அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. முன்னதாக ஓபிஎஸ்க்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் 2,750 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பார்கள் அழைக்கப்படவில்லை. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன், ஆதார் அட்டை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு முதலில் செயற்குழு கூட்டமும், அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டமும் நடக்கும். அதன்பின் அவைத் தலைவர் பேசுவார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்படும்.
இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூடுவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையரகம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புப் பணிக்காக 2,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்ற உயர் நீதிமன்றம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால் இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பது உறுதியாகி உள்ளதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்: ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஜெ. நினைவிடத்தில் ஒப்பாரி வைத்து தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM