வானவேடிக்கை செய்யும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அந்த இடத்திலிருந்து மூவர், 200 மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட சம்பவம், கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் தூக்கி வீசப்பட்டவர்கள் மூவரும், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் வனிதா என்பவர் கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் வானவேடிக்கை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். இன்று அனுமதி பெற்று அங்கு வேலை நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கட்டடம் தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி இருந்த சத்யராஜ் என்பவர் உடல் சிதறி 200 மீட்டருக்கு அப்பால் உடல் போய் விழுந்துள்ளார். மேலும் அம்பிகா, சித்ரா ஆகிய இருவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு உள்ளனர். இவர்கள் மட்டுமன்றி, வசந்தா என்ற பெண் படுகாயமடைந்துள்ளார். வானவேடிக்கை வாங்க வந்த வைத்தியலிங்கம் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். சத்யராஜ், அம்பிகா, சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.
வசந்தாவும் வைத்தியலிங்கம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி சத்தம் கேட்டு சுற்றுவட்டார பகுதி மக்கள் முழுவதும் ஓடி வந்துள்ளனர். ஆனால் 20 நிமிடத்திற்கு மேலாக வெடிச்சத்தம் குறையாமல் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது. இதனால் அவர்களாலும் படுகாயமடைந்தோரை மீட்க முடியாமல் போயுள்ளது.
இதையும் படிங்க… உதகை: புலியை துரத்தும் செந்நாய்கள்… ஊருக்குள்ளும் அடிக்கடி வருவதால் மக்கள் அச்சம்
வெடிச்சத்தம் குறைந்த பிறகுதான் காவல்துறை தீயணைப்புத்துறை என அனைவரும் சம்பவ இடத்தினில் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் உடலை மீட்க முடிந்தது என கிராம மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதுபோல் அந்த பகுதியில் இப்படியொரு விபத்து நடந்தது இல்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே வெடிபொருட்கள் இருந்ததா அல்லது கூடுதலாக வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்ததா, விபத்துக்கு என்ன காரணம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM