க.சண்முகவடிவேல்
திருச்சியை அடுத்துள்ள லால்குடி கூடலூர் பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவர் இன்று தனது மனைவி மற்றும் மகனுடன் திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அவர் வரும்போதே தன்னுடன் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இந்தநிலையில் ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் உடனடியாக செயல்பட்டு தண்ணீரை குடம் குடமாக ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் அழைத்துச்சென்றனர்.
ஆட்சியர் முதல்வர் வருகை தொடர்பாக முக்கொம்பு ஆய்வுக்கு சென்றிருந்ததால் ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனுவை கொடுத்த சிவனேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
நான் திருச்சி மாவட்டம் லால்குடி கூடலூர் பகுதியில் வசித்து வருகின்றேன். எனது குடும்பம் பாரம்பரியமாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறது. எங்கள் வீட்டின் அருகே அரசு பள்ளி ஒன்று 12 வருடமாக செயல்பட்டு வருகின்றது. அந்தப் பள்ளியின் முகப்பு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அரசு அதிகாரிகள் முயன்றனர்.
அந்த முகப்பு பகுதியை ஒட்டியே எங்கள் வீடும் இருப்பதால் வீட்டின் முன்பாக பள்ளியின் சுற்றுசுவர் கட்ட பள்ளம் தோட்டி சுவர் கட்ட ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதனால் எங்கள் வீட்டிற்குள் நாங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும், அதிகாரிகளிடம் அலைபேசி வாயிலாக பேசியும் எந்த நடவடிக்கையும் எட்டப்படாமல் காம்பவுண்ட் எடுக்கும் பணி தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கின்றது.
நாங்களும் வீட்டிற்குள் இருந்து வெளியே வரமுடியவில்லை, எங்களது குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றோம். வீட்டிலும் இருக்க முடியாமல் வெளியேவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், அதிகாரிகளின் அலட்சியப்போக்கினை கண்டித்தும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ள முயன்றோம்” என்றார். ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயி ஒருவர் தமது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil