புதுடெல்லி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு (64) போட்டியிடுவார் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதுபோல காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திரவுபதி முர்மு நாளை (ஜூன் 24) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது. அப்போது பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என்றும் மற்றவர்கள் வழிமொழிவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நவீன் பட்நாயக் வேண்டுகோள்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ட்விட்டரில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒடிசாவின் மகள் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவருக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக வாக்களிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “இதுகுறித்து பிரதமர் மோடி என்னுடன் ஆலோசித்தபோது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒடிசா மாநில மக்களுக்கு மிகவும் பெருமை மிகு தருணம் ஆகும்” என கூறியிருந்தார்.