`குரங்கு அம்மை’க்கு புதிய பெயர் வைக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு நோயின் பெயரானது எந்தவொரு நாட்டையும் களங்கப்படுத்துவதாக இருக்கக் கூடாது. சமீபத்தில் மக்களிடையே பரவிய நோய்த்தொற்று, குரங்கு அம்மை (Monkey Pox). குரங்கு அம்மை என்ற பெயர் ஆப்பிரிக்க நாட்டோடு தொடர்புடையதாகப் பலராலும் கருதப்படுகிறது.
உலகளவில் இந்தாண்டு 2,100 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அவர்களில் 84 சதவிகிதம் பேர் ஐரோப்பாவிலும், 12 சதவிகிதம் பேர் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ள நிலையில், வெறும் 3 சதவிகிதம் பேர் மட்டுமே ஆப்பிரிக்காவில் பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் பெரும்பாலான தொற்று நோய்கள் ஆப்பிரிக்காவில் இருந்துதான் பரவுகிறது என்ற பொதுவான எண்ணம் மக்களிடையே உருவாகி விடுகிறது. குரங்குகளை ஆப்பிரிக்க மக்களோடு தொடர்புபடுத்தி பேசும், பல கடந்த கால கசப்பான வரலாற்று சம்பவங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே எந்த ஒரு நோயையும், குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியை வைத்து தொடர்பு படுத்தாமல், அந்த தொற்று வைரஸின் பெயரோ அல்லது அதன் திரிபுகளையோ வைத்து குறிப்பிடுவது நல்லது.
இதன் அடிப்படையில், ’குரங்கு அம்மை’ தொற்றின் பெயரை மாற்றுவதற்காக 29 அறிவியலாளர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், பாகுபாடு இல்லாத, எந்த ஒரு நாட்டையும் களங்கப்படுத்தாத பெயரை ’குரங்கு அம்மை’ நோய்க்கு புதிய பெயராக வைக்க வேண்டும் எனவும், இது ஒரு அவசர தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர். ’குரங்கு அம்மை’க்கு பெயர் மாற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது உலக சுகாதார நிறுவனம்.
1958-ம் ஆண்டு டேனிஷ் ஆய்வகத்தில் குரங்குகளில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ’குரங்கு அம்மை’ என்ற பெயர் சூட்டப்பட்டது. குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ்கள், எலி, முயல், அணில் போன்ற சிறிய கொறித்துண்ணும் பாலூட்டிகள் மூலம்தான் மனிதனுக்குப் பரவுகிறது.
’ஒரு தொற்று பரவும்போது மிருகத்திடம் இருந்து மனிதனுக்கு பரவுவதாகக் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவுகிறது எனச் சொல்லத் தவறி விடுகிறார்கள். தற்போதைய தொற்று வெடிப்பும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதே’ என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஒலிவியர் ரெஸ்டிப் தெரிவித்துள்ளார்.