சென்னை: அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்ததில் எந்தத் தவறும் இல்லை என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2.03 ஏக்கர் நிலத்தை அறநிலையத் துறையின் அனுமதியின்றி, 1963-ம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டு, அதன் ஒரு பகுதியில் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களைப் பாதுகாப்பதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 1.15 ஏக்கர் நிலத்தை கடந்த 2018-ம் ஆண்டு அறநிலையத் துறையின் அனுமதியின்றி போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டு அந்த இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து கோயில் நிர்வாகங்கள் சார்பிலும், குகன், ஸ்ரீதர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சார்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2020-ம் ஆண்டில் உத்தரவு
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களை, கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது எனக் கூறி, இந்த நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்துசெய்து கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘கோயில் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற தனிநீதிபதியின் உத்தரவு சரியானதுதான் என்றும், அந்த உத்தரவுகளை ரத்து செய்ததில் எந்த தவறும் இல்லை. எனவே அந்த கோயில் நிலங்களை அறநிலையத் துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம்’’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.