சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1000 பேர் பலி; ஆப்கானுக்கு தேவையான நிவாரணம் விரைந்து வழங்க தயார்: பிரதமர் மோடி தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1000 பேர் பலியாகி உள்ளனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தேவையான அனைத்து நிவாரண பொருட்களையும் விரைந்து வழங்க தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் நேற்று காலை சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாக பதிவானது. கோஸ்வ் என்ற இடத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இதன் மையம் இருந்தது. கிழக்கு ஆப்கானிஸ்தானின் நகரங்கள், மலைப்பகுதிகளிலும் கூட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், 4 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி முழுவீச்சில் நடக்கிறது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரையில்  ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 1500.க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  மேலும்,  மண்ணில் புதைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்கள் தொடர்ந்து  மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என  அஞ்சப்படுகிறது. மின் மற்றும் செல்போன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல், கோஸ்ட் மாகாணத்திலும் பல இடங்களில் பூகம்பம் உணரப்பட்டது. இப்பகுதியில் 25 பேர் உயிர் இழந்துள்ளனர். 95 பேர் காயம் அடைந்துள்ளனர்.  தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் மீண்டும் சென்ற பிறகு அங்கு ஏற்பட்ட முதல் இயற்கை பேரழிவு இதுவாகும். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் போர்வையில் வைத்து ஹெலிகாப்டர் இருக்கும் இடத்திற்கு தூக்கி செல்லப்படுவதும், காயமடைந்தவர்களுக்கு தரையில் அமரவைத்து சிகிக்சை அளிப்பதும் போன்ற வீடியோக்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நாட்டில் இந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் மிக மோசமான பாதிப்புகளை இந்த பூகம்பம் ஏற்படுத்தி உள்ளது. காபூலில் பிரதமர் முகமத் ஹசான் ஹகுந்த் அளித்த பேட்டியில், பூகம்பத்தால் மோசமாக பாதித்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளின் உதவியை அளிக்கும்படி தலிபான்கள் கோரியுள்ளனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், மிக மோசமான கால கட்டங்களில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா துணையாக இருப்பதாகவும், தேவையான அனைத்து நிவாரண பொருட்களையும் விரைந்து வழங்க தயாராக உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.