சென்னை: “சட்டத்திற்கு புறம்பான தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று அதிமுக பொதுக்குழு மேடையில் ஆவேசமாக அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் வைத்திலிங்கம்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்படுவதாக கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
அப்போது, மேடைக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “சட்டத்திற்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று ஆவேசமாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.
முன்னதாக, மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், “அனைத்து தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது” என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய சி.விசண்முகம், “இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டைத் தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றைத் தலைமை ஏற்பட வேண்டும். எனவே, பொதுக் குழுவில் இரட்டைத் தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்து பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.