சென்னை : சென்னை சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 80 சாலைகள் தயார் நிலையில் உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். இதனைத் தவிர்த்து சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில் 471 சாலைகளில் 12,047 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருப்பது கண்டறியப்பட்டு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி முதல் கட்டமாக 17 சாலைகளில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்பட தொடங்கியது. சென்னை அண்ணாநகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தி.நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட 17 சாலைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த இடங்களில் மொத்தம் 5532 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்களில், 20 சதவீத இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கும், மீதம் உள்ள இடங்கள் நான்கு சக்கர வாகனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது.
பொதுமக்கள் GCC Smart Parking என்ற செயலியில் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவு செய்து, அருகில் எத்தனை வாகன நிறுத்துமிடங்கள் காலியாக உள்ளது என்ற தகவல் பார்த்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், காலப்பேக்கில் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கரோனா தொற்று மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் திட்டமிட்ட வருவாயை ஈட்ட முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை மீண்டும் தீவிரமாக செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் சாலையோர வாகன நிறுத்த திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி துறையிடம் இருந்து இந்தத் திட்டம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை அலுவலர்கள் தினசரி இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.