சென்னை, பூக்கடை காவல் மாவட்டத்தில் 9 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் அம்மா இரண்டாவதாக பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷபி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சிறுமிக்கு சித்தப்பா உறவுமுறை வரும் ஷபி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்து சிறுமி, தன்னுடைய பாட்டியிடம் கூறி அழுதாள். அதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பாட்டி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஷபியிடம் (37) விசாரணை நடத்தினர். பின்னர் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த 2019-ம் ஆண்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை முறையாகத் தாக்கல் செய்தும், சாட்சிகளை ஆஜர்படுத்தியும் வழக்கு நடவடிக்கைகளை போலீஸார் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 22.6.2022-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஷபி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.