இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகள் மேலும் வலுப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் இதன் மூலம் ஆடை உற்பத்தி, கமத்தொழில்,சுகாதாரம், முதலீடு உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஹரிஃபூல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே உயர்ஸ்தானிகர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை-பங்களாதேஷ் இடையிலான 50 ஆண்டு ராஜதந்திர உறவு
இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 2020 ஆம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது.
இந்த காலப்பகுதியில் மிக நெருக்கமாகவும் நட்புறவுடனும் பணியாற்ற இரண்டு நாடுகளுக்கு முடிந்துள்ளது எனவும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் பங்களாதேஷ் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜனாதிபதி பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வித்துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த இரண்டு நாடுகளுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், நிலவும் நிலைமையில் இருந்து துரிதமாக மீள இலங்கையால் முடியும் எனவும் கூறியுள்ளார்.