செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் கோபிகா ஸ்ரீ(5). இவர் ஆட்டிசம் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஆவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனது தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டின் வெளியே வந்த மகாலிங்கம் மகள் தண்ணீர் வாளியில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் உடனடியாக சிறுமியை மீட்டு நந்திவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர் கோபிகா ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.