புதுடெல்லி: அரசு பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் நினைத்தால் ஏழை சமூகத்தை உயர்த்தலாம். இதற்கு உதாரணமாக உத்தரப்பிரதேசம் வாரணாசியில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான இங்கு காவல்துறை கூடுதல் ஆணையராக சுபாஷ் சந்திர துபே பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் இருட்டிய மாலைபொழுதில் பதனி கேட் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எடை பார்க்கும் இயந்திரம் ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொண்டு தெருவிளக்கு ஒளியில் சோனு எனும் சிறுவன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்திருந்ததை கண்ட அவர், வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று விசாரித்தார். ஏழ்மையின் காரணமாக ஆறாம் வகுப்பிற்கானப் பள்ளியில் சேர முடியாமல் அந்த சிறுவன் தெருவிளக்கு ஒளியில் படிப்பதை அறிந்துகொண்டுள்ளார் ஏசிபி சந்திர துபே.
தனது குடும்பச் செலவிற்காக இந்த எடை போடும் இயந்திரத்தின் உதவியால் சில ரூபாய் கிடைப்பதாகவும் சிறுவன் சோனு தன் நிலையை எடுத்துரைக்க, அவனுக்கு உதவ நினைத்த ஏசிபி சந்திர துபே, சோனுவை அருகிலுள்ள ஆதார்ஷ் வித்தியாலாயா எனும் தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார். மேலும், சோனுவுக்கான ஒரு ஆண்டு கல்விக் கட்டணத்தையும் தானே செலுத்தியுள்ளார். இத்துடன் அதற்கான பள்ளிப் பாடநூல்களையும் சோனுவிற்கு வாங்கி கொடுத்துள்ளார். ஏசிபி சந்திர துபேவின் நெகிழவைக்கும் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.