புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரித்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 2-ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து அவரை ஜூன் 23-ம்தேதி (இன்று) ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள சோனியா காந்தி ஓய்வெடுத்து வருகிறார். எனவே அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் தேவை என அவரது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவரை ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். கரோனா தொற்றின்போது அவருக்கு நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். எனவே, விசாரணையை மேலும் சில வாரங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றார்.
இந்தக் கோரிக்கைக்கு அமலாக்கத்துறை செவி சாய்த்துள்ளது. சோனியா ஆஜராகும் தேதியை ஒத்திவைத்ததுடன் புதிய தேதியை அறிவிக்கவில்லை.