புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, வேட்பாளராக்கப்படலாம் என உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் பிப்ரவரி 5-ல் முதன்முதலாக ‘இந்து தமிழ்’ நாளேடு கணித்து வெளியிட்டது. இது உண்மை எனும் வகையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட பழங்குடி வகுப்பின் முர்மு, பல முக்கியத்துவங்கள் பெற்றுள்ளார்.
மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி 2014-ல் பதவி ஏற்றது முதல் அவரது அரசின் பல முக்கிய நடவடிக்கைகளை பத்திரிகையாளர்களால் கணிக்க முடியாமல் இருந்தது. இப்பட்டியலில் பண மதிப்பிழப்பு, குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு எனப் பல உள்ளன.
இதே வகையில், ஜுலை 18-ல் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளரையும் கணிக்க முடியாமல் இருந்தது. இச்சூழலில் பிப்ரவரி 5-ல், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் உத்தர பிரதேச தேர்தலுக்கு முக்கியத்துவம்…’ எனும் தலைப்பில் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் ஒரு செய்தி வெளியானது.
இதில், ஜார்க்கண்டின் ஆளுநராக இருந்த திரவுபதி முர்முக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஜூன் 19 செய்தியில் இது மீண்டும் வெளியாகி இருந்தது. இந்த கணிப்பை உண்மையாக்கும் வகையில் நேற்று முன்தினம் திரவுபதி முர்முவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
திரவுபதி முர்முவின் வெற்றி அநேகமாக உறுதி எனக் கருதப்படுகிறது. ஏனெனில், பாஜக கூட்டணியிடம் 48% வாக்குகள் இருப்பதாகவும், மேலும் 3% வாக்குகளை எதிர்க்கட்சிகளிடம் பெறும் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.
இக்கருத்தை ஏற்கும் வகையில் ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் முதல் தலைவராக தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதிக்கு ட்விட் செய்து ஆதரவளித்துள்ளார்.
நாட்டின் உயரிய பதவிக்கு தேர்வாக இருக்கும் திரவுபதி முர்மு, சந்தாலி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆளும் பழங்குடி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் வேறுவழியின்றி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை மாநிலத்தவர் என்பதால் ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவளிக்கும் எதிர்பார்ப்பு பாஜகவுக்கு உள்ளது. இத்தனை கட்சிகளின் ஆதரவால் திரவுபதியின் வெற்றி உறுதி எனக் கருதப்படுகிறது.
திரவுபதியின் தேர்வால் பாஜகவுக்கு பல அரசியல் ஆதாயங்களும் கிடைக்க உள்ளன. அடுத்து வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமாக பழங்குடி வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கலாம். ஒடிசாவிலும் ஆட்சியைப் பிடிக்க பல தேர்தல்களாக தீவிரம் காட்டும் பாஜகவுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதேநிலை, பழங்குடிகளை அதிகம் கொண்ட ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்படும். ஜார்க்கண்டில் திரவுபதி, கடந்த 2015 முதல் 2021 வரைஆளுநராகவும் பதவி வகித்தவர். இவரை கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே தேர்வு செய்து கடைசி நேரத்தில் மாற்றி தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவரையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் திரவுபதி முர்மு பல முக்கியத்துவங்கள் பெற்றுள்ளார். ஜுன் 20, 1958-ல் பிறந்து 64 வயதாகும் திரவுபதி மிகவும் குறைவான வயது கொண்டவராக உள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவராகவும் திரவுபதி இருப்பார்.
பிரதீபா பாட்டீல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிரதிபா பாட்டீல் தேர்வானது போல், ஒரு பெண்ணாக திரவுபதி, பாஜகவுக்கு கிடைத்துள்ளார். இதில் அவர் 59 வயதில் முதல் ஆளுநராக இருந்து, 64 வயதில் குடியரசுத் தலைவராகவும் ஒரு பழங்குடி சமூகத்தவரை தாம் தேர்வு செய்தது என்பது பாஜகவின் கூடுதல் பலன். இவை அனைத்தின் அரசியல் லாபங்களை 2024 மக்களவைத் தேர்தலில் அள்ள பாஜக முனைப்பு காட்டும் வாய்ப்புள்ளது.
தனது தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் திரவுபதி முர்மு கூறும்போது, ‘‘என்னை தேர்வுசெய்த தகவலை கேள்விப்பட்டு நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இதன் மீது நான் அதிகம் பேச முடியவில்லை. என்றாலும் உங்கள் அனைவருக்கும் நன்றி. குடியரசுத் தலைவருக்கான சட்ட திட்டங்கள் அரசியலமைப்பில் உள்ளபடி நான் பணியாற்றுவேன். எனது பணி, பொதுமக்களிடம் சென்று சேர வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பையும் பெற்று பணியாற்றுவது அவசியம்’’ என்றார்.
யார் இந்த திரவுபதி?
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் உபர்பேடா கிராமத்தில் பிறந்தவர் திரவுபதி முர்மு. இவர், தலைநகரான புவனேஷ்வரின் ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். பிறகு அங்குள்ள அரபிந்தோ இண்டகரல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் கல்லூரியில் உதவிப் பேராசிரியரானார்.
தனது அதிகமான சமூக அக்கறை காரணமாக 1997-ல் அரசியலில் நுழைய விரும்பியவர் தேர்வு செய்த கட்சி பாஜக. அக்கட்சி சார்பில் ராய்ரங்பூர் நகராட்சி உறுப்பினரானார்.
இதே சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 2000 முதல் 2004 வரை எம்எல்ஏவாகவும் திரவுபதி இருந்தார். அப்போது பாஜகவுடனான கூட்டணி ஆட்சி காரணமாக பிஜு ஜனதா தளம் அரசில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறையிலும், மீன்வளம் மற்றும் கால்நடை துறையிலும் தனிஅதிகாரம் பெற்ற இணை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
சிஆர்பிஎப் பாதுகாப்பு
பாஜகவின் பழங்குடியினர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்த திரவுபதி, மயூர்பஞ்ச் மாவட்டத் தலைவராக 2002 முதல் 2009, பிறகு மீண்டும் 2013-ல் தாம் ஆளுநராகும் வரை பதவி வகித்தார். 2007-ல் சிறந்த எம்எல்ஏவாகவும் தேர்வாகி,பண்டிட் நீல்கண்ட் விருதையும் பெற்றார். கடந்த ஜுலை 12, 2021-ல் ஜார்க்கண்டில் ஆளுநர் பதவி ஓய்வுக்குப் பின் தன் உபர்பேடா கிராமத்தில் அமைதியாக வாழ்ந்துவந்தார்.
தற்போது குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரான பின் திரவுபதிக்கு சிஆர்பிஎப் மத்திய படையின் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.