புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், தினசரி காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு குழந்தைகளுக்கு தரப்படும்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் துணை நிலை ஆளுநர் தமிழிசை இத்திட்டத்தை துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கல்வியமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை கூறியது: “நான் சத்யசாய் பக்தை. சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களின் மருத்துவமனை மூலம் ஏழை நோயாளிகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகின்றனர். தெலங்கானாவில் ராஜ்பவன் அருகே பள்ளி உள்ளது. அங்கு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வாக வருவதை கண்டு விசாரித்தேன்.
அப்போது அவர்கள் காலை உணவின்றி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்க கோரினேன். தற்போது மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி மட்டுமின்றி வலிமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது” என்று தமிழிசை கூறினார்.
பின்னர் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியது: “பள்ளிகளுக்கு காலையில் வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, இரவு, காலையில் உணவின்றி பள்ளிக்கு வருவதால்தான் இந்த நிலை என உணர்ந்தோம். இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், ரொட்டி, பிஸ்கெட், பழம், பிற்பகலில் சுண்டல், மதியம் சத்தான உணவு ஆகியவற்றை ஏற்கனவே அரசு வழங்கியது. இடையில் சிலகாலம் தடைபட்டது.
மீண்டும் இதனை தொடங்கியுள்ளோம். தற்போது ஊட்டச்சத்தான பானமும் வழங்க உள்ளோம். மாணவர்கள் பயன்பெறும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசத்யசாயி அன்னபூர்ணா அறக்கட்டளை நிர்வாகி சத்குரு மதுசூதன சாய், நிர்வாகி ஆனந்த்பதானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனிடையே, கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “புதுச்சேரியில் 213 அரசு பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது. சாக்லெட் மற்றும் வெண்ணிலா சுவைகளில் சத்து மாவு கலந்து இந்த பானம் வழங்கப்படும். தொடர்ந்து விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டசத்து பானம் வழங்க
உள்ளனர்” என்று அதிகாரிகள் கூறினர்.