திருவனந்தபுரம்: மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஓட்டல் உட்பட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக மலையாள புதுமுக நடிகை ஒருவர் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது கொச்சி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸ் கைதுக்கு பயந்து அவர் துபாய்க்கு தப்பிச் சென்றார். இதையடுத்து விஜய் பாபுவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியுடன் கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், விஜய் பாபு கேரளா திரும்பினால் மட்டுமே மனுவை விசாரிக்க முடியும் என தெரிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் கேரளா திரும்பினார். இதன் பின்னர் முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. பல நாட்களாக நடந்த இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் நேற்று விஜய் பாபுவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட நடிகையை தொடர்பு கொள்ளவோ, சாட்சிகளை கலைக்கவோ கூடாது. கேரளாவை விட்டு வெளியே செல்லக்கூடாது. வரும் 27ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போலீசார் விசாரணை நடத்தலாம். கைது செய்தால் உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.