ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா: தி ரைஸ் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனை சுகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் 2023ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2ம் பாகத்தில் ராஷ்மிகா இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருக்கும் அல்லு அர்ஜுன் செம்மரக்கடத்தல் தொழிலின் தலைவர் ஆவது போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது. இதில் அவர் கிராமத்து பெண்ணான ராஷ்மிகாவை திருமணம் செய்வதோடு முதல் பாகம் முடிந்திருந்தது. இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜூன் சர்வதேச கடத்தல்காரன் ஆவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் பல வெளிநாடுகளில் நடக்கிறது. கிராமத்து பெண்ணான ராஷ்மிகாவுக்கு வெளிநாட்டு கதையில் அதிக பங்கு இல்லை என்பதால் அவர் வில்லன்களால் கொல்லப்பட்டு விடுவதாக கதையில் மாற்றம் செய்து அது தொடர்பான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டாம் பாகத்திற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளில் ராஷ்மிகா இருந்தாலும் புதிய படப்பிடிப்புகளில் அவர் இல்லை. அதற்கு பதிலாக பாலிவுட் நடிகை ஒருவர் அல்லு அர்ஜூன் ஜோடி ஆவதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா தற்போது விஜய்யுடன் வாரிசு படத்திலும், மிஷன் மஜ்னு, குட்பை, அனிமல் ஆகிய பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் ரவிஷங்கர் புஷ்பா-2 விலும் ராஷ்மிகா தொடர்வார் என்று கூறியுள்ளார்.