லக்னோ: போட்டித் தேர்வுகளுக்கு தயாராக செய்தித்தாள்கள் படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் முதல் 10 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அவர்களுடன் கலந்துரையாடிய யோகி ஆதித்யநாத், தேர்வுக்கு அவர்கள் எப்படி தயாராயினர் என்பதை கேட்டறிந்தார். பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்திய விதம் குறித்து பள்ளி முதல்வர்களிடமும் கேட்டறிந்தார்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உ.பி அரசு அறிமுகம் செய்துள்ள அப்யுதயா திட்டம் குறித்து அவர் விளக்கினார். இத்திட்டம் மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயாராக்கும் என கூறினார். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற செய்தித்தாள்கள் படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் எனவும், உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.