மெரினாவில் பரமாரிப்பின்றி கிடக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னையில் சுற்றுலாத் தளங்கள் பல்வேறு இருந்தாலும், பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் வருகைத்தர நினைப்பது மெரினா கடற்கரைக்கு தான். ஒவ்வொரு முறை மெரினாவுக்கு வருகைத் தருபவர்கள் நிச்சயமாக அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் சமாதிக்கு பார்வையிட செல்வது வாடிக்கையான ஒன்று. ஆனால், தற்போது அந்த நினைவிடங்களின் நிலைமையைப் பற்றி பாப்போம்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நினைவிடம் (Photographed by Janani Nagarajan)

1969ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் (1909–1969) மறைவிற்கு பின் மெரினா கடற்கரையில் அவருக்கான நினைவிடம் கட்டினர். அண்ணாதுரைக்கான நினைவிடம் கட்டுவதற்கு 2 கோடி 75 லட்சம் செலவிடப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடம் (Photographed by Janani Nagarajan)

இதன்பிறகு தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் (1917-1987) நினைவிடம் 1990ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 8.25 ஏக்கரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவிடம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

2016 ஆம் ஆண்டில், அன்றைய பதவியில் இருந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா (1948-2016) இறந்தபோது, அவர் தனது வழிகாட்டியான எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார். 50 கோடி ரூபாய் செலவில் அவருக்கு புதிய நினைவிடம் கட்டப்பட்டது. ஜெயலலிதா நினைவிடம் பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடம் (Photographed by Janani Nagarajan)

பின்பு, 2018ஆம் ஆண்டு மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் (1924-2018) நினைவிடத்தை அண்ணாதுரை நினைவிடத்திற்கு அருகில் கட்ட முடிவு செய்தனர். இந்த நினைவிடம் 2.21 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு மொத்தம் ரூ. 39 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
நான்கு அரசியல் தலைவர்களின் நினைவிடத்திற்கும் பார்வையிட, மக்கள் ஆரவாரத்துடன் வருவது வழக்கமாகிவிட்டது.

மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆரின் நினைவிடமும், ஜெயலலிதாவின் நினைவிடமும் ஒரு பகுதியிலும், அண்ணாதுரையின் நினைவிடமும் மு.கருணாநிதியின் நினைவிடமும் வேறு ஒரு பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இவ்விரண்டு பகுதிகளுக்கும் பார்வையிட சென்றால் பெரிய வித்தியாசத்தை உணர முடியும். ஏனென்றால், ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் செயற்கை குளம், செடிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பாசன வசதி மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாசன வசதி பார்வையாளர்கள் செல்லும் வழியில் பாய்ச்சும்பொழுது (Photographed by Janani Nagarajan)

பராமரிப்பு போதிய அளவிற்கு இல்லாமல் இருப்பதால், பார்வையாளர்கள் வருகை தரும் போது இடையூறு விளைகிறது. பாசன வசதிக்காக வைக்கப்பட்டிருக்கும் குழாய் பொதுமக்கள் செல்லும் இடத்தில் நீர்பாய்ச்சுவது, போகும் வழியும், திரும்பும் வழியும் ஒரே பாதையில் அமைத்திருப்பது, செயற்கை குளம் பராமரிக்காமல் வைத்திருப்பது போன்றவை மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

ஜெயலலிதா நினைவிடத்தில் செயற்கை குளம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது (Photographed by Janani Nagarajan)

அரசியல் தலைவர்களின் நினைவிடத்திற்கு வருகை தந்த பார்வையாளரிடம் பேசியபோது, அவர் கூறியதாவது “மெரினா கடற்கரைக்கு வருகை தரும்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் நினைவிடங்களுக்கு பார்வையிட வருகிறோம். ஆனால், சமீபமாக ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இங்கு வருகை தந்தாலே நான்கு நினைவிடங்களுக்கு இடையே உள்ள பாகுபாடே கண்கூடாக காண முடிகிறது. போதிய பராமரிப்பு இல்லாமால் இருப்பதால் எங்களுக்கு சுகாதார பிரச்சனைகள் வரும் அபாயம் இருக்குமோ என்று அச்சப்படுகிறோம்” என்று கூறுகிறார்.

அம்மா அருங்காட்சியகம் திறக்கப்படாமல் இருக்கிறது (Photographed by Janani Nagarajan)

மேலும், இங்கு வைத்திருக்கும் அருங்காட்சியகங்கள் திறக்காமல் வைத்திருப்பதும் மக்களின் புகாராக இருக்கிறது.

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு செல்லும் பாதையும் திரும்பும் பாதையும் ஒரே வழியில் மாற்றப்பட்டிருக்கிறது (Photographed by Janani Nagarajan)

மக்கள் முன்னிலையில் பெருந்தலைவர்களின் நினைவிடங்களும், அருங்காட்சியகங்களும் வைக்கப்படுவதற்கு காரணம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறும், நாட்டுக்காக அவர்கள் அளித்த தியாகங்களும் மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தி, அவர்களின் வாழ்வில் கிடைத்த உரிமைகளின் வரலாற்றை போற்ற வேண்டும் என்பதற்கு தான். அதற்கு நினைவிடங்களை சீராக பராமரித்து அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

தலைவர்களின் நினைவிடங்களை தமிழக அரசின் செய்தித்துறை நிர்வகித்து வருகிறது. ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சார்ந்த கட்சி இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நினைவிடம் அரசு சொத்து. கட்சி சார்பில் இல்லாமல் பலரும் வந்து போகிற இடம். இன்னும் சொல்லப்போனால் மெரினாவை தூய்மையாக வைக்கிற அரசுக்கு இந்த நினைவிடத்தையும் தூய்மையாக வைக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே அண்ணாதுரை மற்றும் கலைஞர் நினைவிடங்களை பாதுகாத்து பராமரிக்கும் அக்கறையை ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் காட்ட வேண்டும் என அங்கு வரும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.