தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறேன்.
மேலும், கட்சி தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதில்லை. ஜூன் 14ஆம் தேதி விஜயகாந்த் வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. மேலும், சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் இடம் பிரதமர் நரேந்த மோடி கேட்டறிந்தார். விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.