ராமநாதபுரத்தில் யோகா நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த இயக்குநர் பேரரசுவிடம் சினிமா மற்றும் அரசியல் சார்ந்த சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த வெளிப்படையான பதில்கள் இதோ…
அடுத்த படம் இயக்குவதற்கு இத்தனை ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொள்வது எதற்காக?
“தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு பாணி உண்டு. என்னுடைய படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின் மட்டுமே பெரிய ஆளாக இருப்பார்கள். மற்றபடி காமெடி நடிகர்கள், துணை நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் எவரும் பிரபலமானவர்களாக இருக்க மாட்டார்கள். நான் அப்படி வைத்துக்கொள்ள மாட்டேன். நான் தயாரிப்பாளர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது என்று நினைப்பவன்.
தற்போது வளர்ந்துவரும் இயக்குநர்கள் முதல் படத்தைச் சின்ன பட்ஜெட்டில் எடுத்து வெற்றி கண்டவுடன், அடுத்த படத்தில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின், பிரபலமான மற்ற நடிகர்கள், பெரிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் எனத் தயாரிப்பாளர்களைச் செலவழிக்க வைத்து தங்களைப் பெரிய இயக்குநர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். நான் இதுவரை என்னுடைய படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களைக் கூட நடிக்க வைத்ததில்லை. நிறையத் திறமையானவர்கள் வாய்ப்புகள் தேடி அலைகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறேன்.
ஆனால் என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன். சினிமாவில் வெற்றி பெறுவது என்பது வேறு, வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது என்பது வேறு. நான் வெற்றிபெற்றேன். ஆனால் அதனைத் தக்கவைத்துக்கொள்ளும் சூட்சமம் எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு வருகிறேன். இதுதான் என்னுடைய இடைவெளிக்கான காரணம்.”
துப்பாக்கி சுடும் படங்களுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுப்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் என நீங்கள் விமர்சனம் செய்தது ‘விக்ரம்’ படத்தைக் குறிப்பிட்டா?
“பேன் இந்தியா சினிமா என்ற ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டு, அதே கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அதனால் எடுக்கும் படங்களை பேன் இந்தியா படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தயாரிப்பாளர்களுக்குத் தோன்ற வைக்கின்றனர். நம்முடைய கலாச்சாரம், பண்பாடு போன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் உண்டு, அவர்கள் அதனைத்தான் எதிர்பார்ப்பார்கள்.
அதனால் பேன் இந்தியா படம் எடுக்கும் இயக்குநர்கள், அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றார்போல் காட்சி அமைப்புகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால், துப்பாக்கி சுடும் படங்களுக்கு ஒரு மண்ணின் கலாச்சார, பண்பாட்டுக் காட்சிகள் எதுவும் தேவையில்லை. துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக்கொண்டே இருந்தால் போதும்.
இதனால் புதிய இயக்குநர்கள் என்ன செய்கிறார்கள், அதுபோன்ற படங்களை இயக்கி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இதை நான் பொதுவாகவே கூறினேன். நான் இயக்கும் படங்கள் நம்முடைய கலாச்சாரத்தைப் போற்றும் படங்களாக மட்டுமே இருக்கும். முன்னணி நடிகர்களும் இதுபோன்ற குடும்பப்பாங்கான படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருவது வருத்தமளிக்கிறது. இது ஆரோக்கியமான சினிமாவைச் சீர்குலைத்துவிடும்.”
நடிகர் விஜய்யிடம் புதிய கதை ஒன்றை நீங்கள் சொல்லியிருப்பதாகச் செய்திகள் வந்தனவே? மீண்டும் உங்கள் கூட்டணி அமையுமா?
“நான் விஜய்யை வைத்து ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தேன். சமீபத்தில் அவரிடம் இரண்டு கதைகள் கூறினேன். இப்போது இதுபோன்ற கதை வேண்டாம். ஆக்ஷன் படங்களை மக்கள் விரும்புகின்றனர். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டார். இருந்தாலும் அவருக்குப் பிடித்தமான கதையைத் தயார் செய்து மீண்டும் அவரைச் சந்தித்துக் கதை கூறுவேன்.”
அ.தி.மு.க-வில் தலைமை பொறுப்பிற்கு நடந்துவரும் போட்டாபோட்டி குறித்து உங்கள் கருத்து…
“எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை முகம், அதன் வழியில் ஜெயலலிதா வெற்றி பெற்று அ.தி.மு.க-வை சிறப்பாக வழிநடத்தினார். இவர்கள் இருவரது முகம்தான் அ.தி.மு.க-வின் பலம். ஓ.பி.எஸ் ஜெயலலிதாவால் தற்காலிக முதல்வராக ஆக்கப்பட்டவர், எடப்பாடி பழனிச்சாமி சூழ்நிலையால் முதலமைச்சர் ஆனவர். ஆனால் மக்கள் அவர்கள் இருவரையுமே ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க என்றால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்றுதான் மக்கள் மனதிலிருந்து வருகிறது.
ஒருவேளை நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்றிருந்தால் சசிகலாவும் நுழைந்திருக்க முடியாது, டி.டி.வி-யும் பேச முடியாது, கட்சிக்குள் இத்தனை பிரச்னைகளும் வந்திருக்காது. அவர் வெற்றி பெறவில்லை, அதனால் கட்சியை அவர்கள் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க-வில் விரைவில் மக்களுக்குப் பிடித்தமான தலைவரைத் தேர்வு செய்யவில்லை என்றால் அந்தக் கட்சியே அழிந்துவிடும்.”
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
“தி.மு.க-வில் அண்ணா, கலைஞர் போன்ற திறமையான பேச்சாளர்கள் இருந்தனர். அதேபோல் அ.தி.மு.க-வை பொறுத்தவரை எம்ஜிஆர் என்ற ஆளுமையின் முகம் இருந்தது. பா.ஜ.க-வில் பேச்சாளரும் இல்லை, மக்களுக்கு முகமாக அறிமுகமானவர்களும் கிடையாது. ஆனால், இப்போது அண்ணாமலையைத் தமிழக மக்கள் முழுவதுமாக ஏற்றுக்கொண்டனர். அவரது பேச்சில் உண்மை இருப்பதால் அவருக்கான வரவேற்பு அபரிமிதமாக உள்ளது. அடுத்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால், கண்டிப்பாக முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக இருக்கிறது.”