2022 ஜூன் 23ஆந் திகதி ஒரு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகள் தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர்கள் சுமுகமாகக் கலந்துரையாடினர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும் கலந்துரையாடினர். தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக இந்தியா இலங்கைக்கு நல்கி வரும் ஆதரவு மற்றும் உதவிகளுக்கு வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலாளருடன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தெற்காசியப் பிரிவின் மேலதிக செயலாளர் பி. காண்டீபன், தெற்காசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. தர்மபால, பொருளாதார விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சந்தன வீரசேன ஆகியோரும் இதன் போது கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூன் 23