புதுடெல்லி: யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 13 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான 861 இடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வை கடந்த 5ம் தேதி நடத்தியது. இந்த எண்ணிக்கை தற்போது 1,022 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் நிலை தேர்வை 11.52 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், 13,090 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி குறித்த விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.தேர்ச்சி பெற்றவர்கள் விரிவான விண்ணப்ப படிவம்-I ஐ மீண்டும் பூர்த்தி செய்து பிரதான தேர்வுக்கு விண்ணப்பிக்கும்படி யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் மேற்கூறிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.