புதுடெல்லி: நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 3 மக்களவை, 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன. உத்தரப்பிரதேசத்தின் அசாம்கர் தொகுதி மக்களவை எம்பியான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எம்எல்ஏ.வாக தேர்வானதை அடுத்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல், இதே கட்சி மூத்த தலைவர் அசாம் கானும் சட்டப்பேரவைக்கு தேர்வானதால் ராம்பூர் மக்களவை தொகுதியில் ராஜினாமா செய்தார். பஞ்சாபின் சங்ரூர் தொகுதியானது, முதல்வர் பகவத் மான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் காலியானது. இந்த மூன்று மக்களவை தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல் டெல்லி ராஜிந்தர்நகர் எம்எல்ஏ ராகவ் சந்தா சமீபத்தில் மாநிலங்களவைக்கு தேர்வானதால் அந்த தொகுதி காலியானது. ஜார்கண்ட் மந்தர், ஆந்திராவின் அத்மாகூர், அகர்தலா, போர்டோவாலி, சுர்மா மற்றும் திரிபுராவின் ஜூபராஜ்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உத்தரப்பிரதேசத்தில் மாலை 5 மணி வரை அசாம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை தொகுதியில் 41 சதவீதமும், சங்ரூர் தொகுதியில் 36 சதவீதமும் வாக்குகள் பதிவானது. ராஜிந்தர் நகர் சட்டமன்ற தொகுதியில் மாலை 5மணி வரை 40.65 சதவீதம் மற்றும் திரிபுராவின் நான்கு தொகுதியில் 76.62 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.