புதுடில்லி;மூன்று லோக்சபா மற்றும் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.பஞ்சாபில், சங்ரூர் லோக்சபா தொகுதியின் ஆம் ஆத்மியின் எம்.பி., யாக இருந்தவர் பகவந்த் மான். இங்கு, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றதையடுத்து, சங்ரூர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
இதேபோல், உத்தர பிரதேசத்தில் ஆஜம்கர் லோக்சபா தொகுதி எம்.பி., யாக இருந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராம்புர் தொகுதியின் எம்.பி.,யாக இருந்த சமாஜ்வாதியின் ஆஜம்கான் ஆகியோர், இங்கு பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, இருவரும் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நான்கு சட்டசபை தொகுதிகளும், டில்லி, ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதியும் காலியாக உள்ளன. இதைடுத்து, மூன்று லோக்சபா மற்றும் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்ததாகவும், அனைத்து தொகுதிகளிலும், விறுவிறுப்பாக ஓட்டுகள் பதிவானதாகவும், தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement