சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று முடிந்த பொதுத்தேர்வுகளின் முடிவுகள் நேற்று முன்தினம் வெற்றிகரமாக வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பல்வேறு உயர்படிப்புகளுக்கான சேர்க்கைகளும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. தற்போது பொறியியல் கலந்தாய்விற்கான இணையத்தள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இன்ஜினீயரிங் கவுன்சலிங் பற்றிய முழுமையான வழிகாட்டி இதோ…
எந்தக் கல்லூரியில் சேரலாம்?
நமக்குத் தேவையான பாடப்பிரிவு அக்கல்லூரியில் இருக்கிறதா என்று பார்த்தால் மட்டும் போதாது. அக்கல்லூரியின் சூழல், வேலைவாய்ய்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டு கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் NIRF (National Institute Ranking Framework) ரேங்கிங், இந்திய அளவில் அந்த கல்லூரியின் தரம் குறித்தும் தெரிந்துகொள்வது மிக அவசியம்.
பாடப்பிரிவுகளின் வகைகள் என்னென்ன?
பொறியியல் படிப்புகள் சர்க்கியூட் பாடப்பிரிவு, நான்-சர்க்கியூட் பாடப்பிரிவு என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சார்ந்த பாடப்பிரிவுகளை சர்க்கியூட் பாடப்பிரிவுகளாகவும் மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை நான்-சர்க்கியூட் பாடப்பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தற்போதைய சூழலில் சர்க்கியூட் பாடப்பிரிவே பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் எந்த பாடப்பிரிவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை மாணவர்கள் ஆலோசித்து முடிவு எடுப்பது சிறந்தது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோடிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடப்பிரிவுகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
என்ன படித்திருக்க வேண்டும்?
12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் கொண்ட பாடப்பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பைப் படித்திருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் கொள்வர். பொறியியல் தொழிற்கல்வி படித்தவர்களுக்கு எழுத்து-செயல்முறைப் பாடங்களின் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இப்பாடங்களில் பொதுப்பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களும், பி.சி/எம்.பி.சி/டி.என்.சி/எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 40 சதவிகித மதிப்பெண்களும் குறைந்தபட்சம் எடுத்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே https://www.tneaonline.org/ என்ற இணைய முகவரியில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது TNEA மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தல், தகவல் பதிவு செய்தல், விண்ணப்பித்திற்கான கட்டணம் செலுத்துதல், விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்தல், விருப்பப் பாடப்பிரிவை தேர்வு செய்தல், தற்காலிக இட ஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல் போன்ற அனைத்தையும் இணையத்திலேயே பதிவு செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க என்னென்ன வேண்டும்?
புகைப்படம்,
மாணவர் அல்லது பெற்றோரின் அலைபேசி எண்,
மின்னஞ்சல் முகவரி,
விண்ணப்பித்திற்கான கட்டணம் செலுத்த தேவையான வங்கி மற்றும் கார்டு விவரங்கள்,
கல்வி, சாதி, இருப்பிட சான்றிதழ்கள்,
முதல் பட்டதாரி கல்விக் கட்டணச் சலுகைக்கான சான்றிதழ்கள்,
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்கள்
இணையம் வழியாக பணம் செலுத்த முடியாதவர்கள் “THE SECRETARY, TNEA, CHENNAI-25” என்ற பெயரில் D.D எடுத்து அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்:
ஜூலை 22 – அனைத்து விண்ணப்பதாரருக்கும் சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு
ஜூலை 20-31 – மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு
ஆகஸ்ட் 8 – தரவரிசை பட்டியல் வெளியீடு
ஆகஸ்ட் 9-14 – தரவரிசை பட்டியல் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளல்
ஆகஸ்ட் 16-18 – மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு கலந்தாய்வு
ஆகஸ்ட் 22-அக்டோபர் 14 – அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீடு
அக்டோபர் 15,16 – துணை கலந்தாய்வு
அக்டோபர் 17,18 – அருந்ததியர் பிரிவு காலி இடங்களில் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு கலந்தாய்வு
இன்னும் தகவல் வேண்டுமா?
மாணவர்களின் மற்ற கேள்விகளுக்கான பதில்களை 0462-2912081,82,83,84 & 85, 044-22351014, 044-22351015 ஆகிய எண்களில் பெறலாம். அல்லது என்ற இணைய முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.