இந்திய ராணுவத்துக்கு புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்’ எனும் திட்டத்தைக் கடந்த வாரம் செவ்வாயன்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. 4 ஆண்டுக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடத்தப்படும் இந்தத் திட்டத்தில், பணியமர்த்தப்படும் அக்னி வீரர்களில் 25 சதவிகித வீரர்கள் மட்டுமே நேரடியாக ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதுவும் 15 ஆண்டுகளுக்கு மட்டும்தான். மீதமுள்ள 75 சதவிகித அக்னி வீரர்கள், நான்காண்டுக்கால ஊதியத்துடன் வெளியேற்றப்படுவர். இதனால், மத்திய அரசு இந்தத் திட்டத்தை திரும்பப்பெறக்கோரி, நாடளவில் இளைஞர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் ஊடகத்திடம் இன்று பேசிய கெஜ்ரிவால், “இந்த அக்னிபத் திட்டம், நம் நாட்டுக்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்தத் திட்டத்தில், 4 ஆண்டுகள் அவர்கள் பணியாற்றிய பிறகு, முன்னாள் ராணுவத்தினர் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல், ஓய்வூதியமும் அவர்களுக்குக் கிடைக்காது. எனவே மத்திய அரசு, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும், 4 ஆண்டுகள் மட்டுமல்லாது, வாழ்நாள் முழுவதும் நாட்டுக்குச் சேவை செய்ய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கும் போதிலும், மத்திய அரசு அறிவித்தபடி இன்று முதல் இந்திய ராணுவப்படையில் விமானம் மற்றும் கப்பற்படைக்கு `அக்னிபத்’ மூலம் ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பித்தல் தொடங்கியுள்ளது. ஜூலை 5-ம் தேதி வரை இதில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.