சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விடிய விடிய விசாரித்த நீதிபதிகள்,‘‘பொதுக்குழு நடத்தலாம். புதிதாக தீர்மானம் நிறைவேற்ற கூடாது’’என்று உத்தரவிட்டனர். இதனால், புதிய தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு தடை விதிக்ககோரி, வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், கோவையை சேர்ந்த கே.சி.சுரேன் பழனிசாமி, தணிகாசலம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
22-ம் தேதி (நேற்று முன்தினம்) இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து, இரவு 8.45மணி அளவில் உத்தரவை பிறப்பித்தார். அதில், ‘‘அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடையில்லை’’ என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், ‘கடந்த 2021 டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகள் இருக்கும்நிலையில், ஒற்றைத் தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க கூடாது’ என்று கோரப்பட்டிருந்தது.
இதை அவசர வழக்காக நேற்றுமுன்தினம் இரவே விசாரிக்க தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியிடம் அனுமதி பெறப்பட்டது. சென்னை அண்ணா நகரில்உள்ள மூத்த நீதிபதி எம்.துரைசாமியின் இல்லத்தில் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் இரவு நடந்தது. சக நீதிபதி சுந்தர் மோகன் நள்ளிரவு 12.15 மணிக்கு அங்கு வந்தார்.
மனுதாரர் சண்முகம் மற்றும்எதிர்மனுதாரரான ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராம், பி.எச்.அரவிந்த்பாண்டியன், வழக்கறிஞர்கள் சி.திருமாறன், ஆர்.வி.பாபு, பி.ராஜலட்சுமி ஆகியோரும், பழனிசாமி தரப்பில் மூத்தவழக்கறிஞர்கள் விஜய்நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கிய விசாரணை விடிய விடிய நீடித்தது.நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் நேற்று அதிகாலை 4.20-க்கு தீர்ப்பு வழங்கினர். ‘‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் தரப்பில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் குறித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்கலாம்.
கட்சி விதிகளில் திருத்தம் செய்யவோ, புதிதாக தீர்மானங்கள் நிறைவேற்றவோ கூடாது’’என்று உத்தரவிட்டனர். இதனால்,பொதுக்குழுவில் புதிய தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.