புதுடில்லி :அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை, இந்தியாவை, நடுத்தர கால அளவில் பாதிக்கும் என ஆராய்ச்சி நிறுவனமான ‘நோமுரா’ அறிவித்து உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்திய பொருளாதாரம், நுகர்வு, முதலீடு, தொழில் போன்றவற்றின் மேம்பாடுகளால் வழிநடத்தப்பட்டு, இயல்புநிலையை விட அதிக வளர்ச்சியை கண்டு வருகிறது.சேவைகள் துறை, கடந்த மார்ச் மாதத்தில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அதைவிட மிகவும் அதிகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்து உள்ளது.இருப்பினும், நடுத்தர கால அளவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார மந்த நிலையின் காரணமாக, பாதிப்புக்கு உள்ளாகும். வளர்ச்சி வேகம் குறையும்.அமெரிக்காவில், நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில், பொருளாதார மந்தநிலை துவங்கும் என கணித்துள்ளோம்.
இந்நிலையில், இதன் பாதிப்பு இந்திய பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும்.ஏற்கனவே இந்தியா வளர்ச்சிக்கான சவால்களுடன் உள்ளது. குறிப்பாக, அரசின் இலக்கை தாண்டி பணவீக்கம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் 5.4 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு நோமுரா தெரிவித்துள்ளது.
Advertisement