தி.மு.க எம்.பி-யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தி.மு.க-வில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி சமீபத்தில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதையடுத்து பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் பதவி சூர்யா சிவாவுக்குக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா சிவா தொடர்ந்து தி.மு.க தலைமை மற்றும் தி.மு.க அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லிவந்தார். இப்படியான நிலையில், ஆம்னி பஸ் ஒன்றைக் கடத்தியதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சூர்யா சிவா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
என்ன நடந்தது… ஜூன் 11-ம் தேதி இரவு சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த சூர்யா சிவாவின் கார்மீது, விக்கிரவாண்டி கெடிலம் அருகே ஆம்னி பஸ் ஒன்று மோதியிருக்கிறது. அதையடுத்து சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்மீது அருகிலிருந்த திருநாவலூர் காவல் நிலையத்துக்குச் சென்று சூர்யா சிவா புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், ஆம்னி பஸ்ஸின் உரிமையாளரான அண்ணாமலை என்பவர், `பஸ்ஸுக்கு இன்ஷூரன்ஸ், பர்மிட் என எதுவும் இல்லை. போலீஸ் புகார் எனச் சென்றால் தேவையில்லாத சிக்கல் ஏற்படும். எனவே, காருக்கு ஆகும் செலவை நான் கொடுத்துவிடுகிறேன்’ எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அதையடுத்து காருக்குச் செலவான 6 லட்ச ரூபாய்க்கான விவரத்தை சூர்யா சிவா, சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளருக்கு அனுப்பிவைத்திருக்கிறார். ஆனால், பஸ் உரிமையாளரிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதையடுத்து, கடந்த 19-ம் தேதி இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருக்கிறது. அப்போது சூர்யா சிவா தரப்பு அங்கு சென்று, `பணத்தைக் கொடுத்துவிட்டு பஸ்ஸை எடுத்துக்கோங்க’ என டிரைவருடன் அந்த பஸ்ஸை அங்கிருந்து எடுத்துச் சென்று தனக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்றில் நிறுத்தியிருக்கிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் நிறுவனத்தின் மேலாளரான முருகானந்தம் என்பவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, சூர்யா சிவா கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சூர்யா சிவா கைதானதைத் தொடர்ந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையிலான பா.ஜ.க-வினர் கண்டோன்மென்ட் காவல் நிலையம் முன்பு கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ.க-வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
‘கட்சி காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அமைச்சர் பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் தூண்டுதலின் காரணமாகவுமே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’ என கைதான சூர்யா சிவா குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பொய்யான வழக்கு தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று ஸ்டாலின், மம்தா ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவிவருகிறது. பார்த்துக்கொண்டிருக்கிறோம். பொறுத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் நேரம் வரும்வரை காத்துக்கொண்டிருக்கிறோம். பொய்யான வழக்குகளைத் தொடுப்பது தி.மு.க அரசுக்குப் புதிதல்ல. அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. சகோதரர் சூர்யா சிவா அவர்கள் கைதுசெய்யப்பட்டதை தமிழக பா.ஜ.க வன்மையாகக் கண்டிருக்கிறது’ எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.