குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவிருப்பதையொட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு-வும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வும் போட்டியிடுகின்றனர். இதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-ல் மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தவர். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாகப் போட்டியிடும் பழங்குடியின வேட்பாளர் ஆவர்.
2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றிய திரௌபதி முர்மு, இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் இந்தியாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவரும், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவரும் என்ற பெருமைக்குரியவராவார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் போட்டி குறித்து யஷ்வந்த் சின்ஹா, “நான் யார்? திரௌபதி முர்மு யார் என்பதற்கான போட்டி அல்ல, சித்தாந்தத்துக்கான போட்டி” எனக் கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த யஷ்வந்த் சின்ஹா, “இந்த முறை குடியரசுத் தலைவர் போட்டி என்பது, அடையாளத்துக்கான போட்டி அல்ல, சித்தாந்தத்துக்கான போட்டி. இங்கு நான் யார், முர்மு யார் என்பது கேள்வியல்ல, நம் அரசியலில் அவர் எந்த சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், நான் எந்த சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்பதுதான் இங்கு கேள்வி. இதில், இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்குத் தான் நான் களத்தில் நிற்கிறேன்” என்று கூறினார்.