திருப்புமுனை பகுதியில் இதுவரை பல புராடக்ட் நிறுவனங்களின் `டேர்ன் அரவுன்ட்’ நிகழ்வுகளைப் பார்த்தோம். ஆனால், முதல்முறையாக சேவை நிறுவனத்தை, அதிலும் குறிப்பாக, நிதி சார்ந்த சேவை நிறுவனமான மிரே அசெட் (Mirae Asset) நிறுவனம் குறித்துப் பார்க்கப் போகிறோம்.
நிலைத்து நிற்க முடியாத வெளிநாட்டு நிறுவனங்கள்…
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் துறை என்பது வளர்ந்துவரும் துறை. இதில் இதுவரை இந்திய நிறுவனங்கள் மட்டுமே பெரிய வெற்றி அடைந்திருக்கின்றன. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் தொழில் தொடங்கின. ஆனால், தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் வெளியேறின. இந்திய சந்தையில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை டஜன் இருக்கும் என்பது நமக்கு ஆச்சர்யம் தரும் டேட்டா.
ஆனால், அந்த வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து தனித்து செயல்படுவது மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்தான். கொரியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம், இந்தியாவில் நிர்வகிக்கும் மொத்த சொத்த மதிப்பு (Asset Under Management) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது. (2022 மே மாத முடிவில் ரூ.1,02,739 கோடியாக இருக்கிறது) மற்ற இந்திய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை குறைவு போல தோன்றும். ஆனால், மிரே அஸெட் கடந்து வந்த பாதையைக் கவனித்தால் இது மிகப் பெரிய திருப்புமுனை என்பது புரியும்.
மிரேயின் ஆரம்பக் காலம்
2003 முதல் 2008-ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தைகள் அபரிமிதமாக உயர்ந்த காலம். அப்போது நிதி சார்ந்து தொடங்கப்பட்ட எல்லா நிறுவனங்களும் பெரிய வளர்ச்சி அடைந்தது. காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் என அனைத்து நிறுவனங்களும் பெரிய வளர்ச்சியை அடைந்தன.
அந்தச் சமயத்தில் தொடங்கப்பட்டதுதான் மிரே அஸெட். 2006-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. சந்தையில் நல்ல வளர்ச்சி இருந்ததால், இந்த ஃபண்டும் வளர்ச்சி அடைந்தது. 2008-ம் ஆண்டு இந்த நிறுவனம் சுமார் ரூ.3,400 கோடி அளவுக்கு முதலீட்டைக் கையாண்டது. ஆனால், 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட `சப் பிரைம் கிரைசஸ்’ காரணமாக உலக அளவில் பங்குச் சந்தையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையும் பாதியாகக் குறைந்தது. அதனால் இந்த நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு இயல்பாக குறைந்தது. கையாளும் தொகையும் இயல்பாகக் குறைந்து.
மிரே அஸெட் புதிய ஃபண்ட் நிறுவனம்; அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்களும் பணத்தை எடுக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் இந்த ஃபண்ட் கையாளும் தொகை ஜீரோ என்னும் நிலைக்குச் சென்றது. இந்தச் சமயத்தில், எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், கடையை மூடிவிட்டுச் சென்றிருப்பார்கள். ஆனால், இந்தியா என்பது முக்கியமான சந்தை என்பதில் உறுதியாக இருந்தது மிரே அஸெட்.
இந்தியாவில் வெற்றி அடைய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குக்கூட தாய் நிறுவனம் பெரிய வங்கியாகவோ, பெரிய நிதி நிறுவனமாகவோ இருக்கும். ஆனால், எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் மிரே அஸெட் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
முக்கியமாகக் கவனித்த மூன்று விஷயங்கள்…
மிரே அஸெட் எப்படி இந்தத் திருப்புமுனையைச் சந்தித்தது என்பது குறித்து நிறுவனத்தின் தலைமையை செயல் அதிகாரி ஸ்வரூப் மொஹந்தியுடன் (Swarup Mohanty) பேசியபோது பல சுவாரஸ்யமான விஷயங்களை எடுத்துச் சொன்னார்.
“நிதிச் சேவைத் துறையில் வெற்றி பெற வேண்டும் எனில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நீண்ட நாளைக்கு சந்தையில் இருந்தால் மட்டுமே நம்பிக்கையை உருவாக்க முடியும் என்பதுதான் யதார்த்தம். அதனால் எங்களுடைய தாய் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என முடிவெடுத்தது. தொடர்ந்து அதற்கான முதலீட்டை செய்துகொண்டே இருந்தது.
இரண்டாவதாக, நாங்கள் போட்டியிடுவது இந்தியாவின் மிகப் பெரிய பிராண்டுகளுடன். அதனால் தரமான புராடக்ட் இருந்தால் மட்டுமே பெரிய பிராண்டுகளுடன் நாங்கள் போட்டி போட முடியும். அதனால் புராடக்ட்டுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். புராடக்ட்டுகளில் கவனம் செலுத்துகிறோம் என்பதால், அனைத்து புராடக்ட்டுகளும் இருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. இப்போதும் எங்களிடம் அனைத்து புராடக்ட்டுகளும் இல்லை. முதலீட்டாளர்களுக்குத் தேவையான புராடக்ட்டுகள் மட்டுமே வைத்திருக்கிறோம்.
அடுத்ததாக, கம்ப்ளையன்ட்ஸ். நிதி சார்ந்த விஷயத்தில் வருமானம் அதிகமாக இருக்க வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு. அதைவிட புகார்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம். கம்ப்ளையன்ட்ஸில் சிக்கல் இருந்தால், அதிக வருமானம் இருந்தால்கூட சந்தையைப் பிடிக்க முடியாது. அதனால் கம்ப்ளையன்ட்ஸ் விஷயத்திலும் கவனமாக இருந்தோம்’’ என்று ஸ்வரூப் கூறினார்.
ஏன் வளரவில்லை..?
இவ்வளவு இருந்தும் பெரிய தொகையைத் திரட்ட முடியவில்லை. 2008-ம் ஆண்டு `0’ என்னும் நிலைமைக்குச் சென்ற தொகை அதன் பிறகும் பெரிதாக உயரவில்லை. 2014-ம் ஆண்டுதான் ரூ.1,670 கோடி என்னும் தொகையை எட்டியது. அப்போது மிகச் சிறிய லாபத்தை (ரூ1.58 கோடி) எட்டியது. இதற்கு என்ன காரணம் என்று ஸ்வரூபிடம் கேட்டோம்.
“நாங்கள் சிக்கனமாக நிறுவனத்தை நடத்தினோம். ரூ.660 கோடியைக் கையாளும்போது நாங்கள் பிரேக் ஈவன் அடைந்தோம். இவ்வளவு சிறிய தொகையில் எந்த நிறுவனம் பிரேக் ஈவன் அடைய முடியாது. சில நிறுவனங்கள் சுமார் ரூ.5,000 கோடி அளவுக்குக் கையாளும்போதுதான் லாபத்தை அடைந்தன. ஆனால், நாங்கள் ரூ.660 கோடியிலே லாபத்தை அடைந்தோம்.
இவ்வளவு இருந்தும் பெரிய தொகையைத் திரட்ட முடியவில்லை. 2008-ம் ஆண்டு `0’ என்னும் நிலைமைக்குச் சென்ற தொகை அதன் பிறகும் பெரிதாக உயரவில்லை. 2014-ம் ஆண்டுதான் ரூ.1,670 கோடி என்னும் தொகையை எட்டியது. அப்போது மிகச் சிறிய லாபத்தை (ரூ1.58 கோடி) எட்டியது. இதற்கு என்ன காரணம் என்று ஸ்வரூபிடம் கேட்டோம்.
“நாங்கள் சிக்கனமாக நிறுவனத்தை நடத்தினோம். ரூ.660 கோடியைக் கையாளும்போது நாங்கள் பிரேக் ஈவன் அடைந்தோம். இவ்வளவு சிறிய தொகையில் எந்த நிறுவனம் பிரேக் ஈவன் அடைய முடியாது. சில நிறுவனங்கள் சுமார் ரூ.5,000 கோடி அளவுக்குக் கையாளும்போதுதான் லாபத்தை அடைந்தன. ஆனால், நாங்கள் ரூ.660 கோடியிலே லாபத்தை அடைந்தோம்.
எங்களது தாய் நிறுவனம் இந்திய செயல்பாட்டில் கவனமாக இருக்கிறது. அதற்காகத் தொடர்ந்து முதலீடு செய்யத் தயாராக இருக்கிறது. அதற்காக லாபம் இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முதலீடு செய்து அனைவருக்கும் சோர்வை உருவாக்கும். அதனால் விரைவாக லாபம் பாதைக்குத் திரும்புவதற்கேற்ப திட்டங்களை வகுத்தோம். ரூ.660 கோடி கையாளும்போது பிரேக் ஈவன் என்பது யாருமே செய்ய முடியாதது. அதற்காக எங்களுடைய `எக்ஸ்பென்ஸ் ரேஷியோ’ அதிகம் என்றும் நினைக்க வேண்டாம், அது குறைவுதான்.
2014-ம் ஆண்டு மார்னிங் ஸ்டார் மற்றும் வேல்யூ ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இரண்டு ஃபண்டுகளை ரேட்டிங் செய்யத் தொடங்கியது. அதனால் புதிய முதலீட்டாளர்கள் நம்பிக்கையாக முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.
இந்தச் சமயத்தில் ஒரு இந்திய நிறுவனத்துடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படலாமா என்னும் யோசனையும் இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால், இந்தச் சமயத்தில் ஆர்கானிக்காக எங்களுடைய பண்ட் அளவு உயர்ந்ததால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம்’’ என ஸ்ச்ரூப் தெரிவித்தார்.
உங்கள் பிரத்யேக முதலீட்டுத் கொள்கை என்ன என்று கேட்டோம்.
“எங்களிடம் கேஷ் என்பதே கிடையாது. ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்வதற்காகத்தான் நம்மிடம் வருகிறார். அந்தத் தொகையை முதலீடு செய்யாமல் வைத்திருப்பது தேவையற்றது என நாங்கள் கருதுகிறோம். சந்தையைக் கணிப்பது கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் எங்களிடம் வரும் தொகையை உடனுக்குடன் முதலீடு செய்கிறோம். எங்களுடைய ஃபண்டுகளின் வருமானம் உயர்வாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்’’ என்றார் ஸ்வரூப்.
இந்தியாவில் உள்ள மற்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு தாய் நிறுவனம் இருக்கிறது, புராடக்ட்டுகளை விற்பனை செய்ய நாடு முழுவதும் கிளை இருக்கிறது. ஆனால், எதுவும் இல்லாமல் ஒரு லட்சம் கோடியைத் தொட்டிருப்பது என்பது நிச்சயம் பெரிய வெற்றிதான்.
(திருப்புமுனை தொடரும்)