திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட எஸ்.பி, காவல் துணை ஆணையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் என 40 வயதுக்குட்பட்டோர் திருச்சி மாவட்ட நிர்வாகத்தை அலங்கரிக்கின்றனர்.
அரசு நிர்வாகத்தில் மாநில, மாவட்ட அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பெரும்பாலும் அனுபவம் நிறைந்தவர்களே பணியில் இருப்பர். ஒரு சில மாவட்டங்களில், ஒரு சில பணியிடங்களில் மட்டுமே இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படியான சூழலில் தற்போது, திருச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான முக்கிய நிர்வாக பதவிகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளது மக்களிடம் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியரான பொறியாளர்: திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரதீப்குமார் பி.டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். இவர், 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். திருச்சி ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழலை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துகிறார்.
மாநகராட்சி ஆணையரான மருத்துவர்: அதேபோல, திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக பதவியேற்றுள்ள ஆர்.வைத்திநாதன். மருத்துவர். இவர், 2016-ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். ஆணையராக பதவியேற்றது முதல் நாள்தோறும் அதிகாலையிலேயே ஆய்வுக்குப் புறப்பட்டு, மாநகரிலுள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் குறை கேட்கிறார். நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வழியாகவும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முக்கியத்துவம் அளித்து வருகிறார். திருச்சியை மீண்டும் தேசிய அளவிலான தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
எஸ்.பி.யான பேராசிரியர்: திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் 2013-ம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர். அதற்கு முன் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். மத்திய மண்டல காவல்துறையில் இளம் வயது எஸ்.பி.யாக கருதப்படும் இவர், வழக்கமான காவல்பணிகளில் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காவலர்கள் நலன்சார்ந்த விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதேபோல, மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையராக அன்பு, தெற்கு துணை ஆணையராக தேவி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் பணியில் இணைந்துள்ளனர்.
இவர்கள் மட்டுமில்லாது, மாவட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பதவிகளிலும் இளம் வயதினரே உள்ளனர்.
இதன்படி, மாவட்ட வன அலுவலர் கிரண், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா, நகர்நல அலுவலர் மருத்துவர் யாழினி, மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகாராணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் கங்காதரணி மாவட்டத்தில் முதன்மைப் பொறுப்பில் உள்ளனர்.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “இளைஞர்களின் கூட்டு முயற்சியால் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வர முடியும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படியொரு வாய்ப்பு தற்போது திருச்சி மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.
மாவட்டத்தின் முதன்மைப் பொறுப்பில் உள்ள பலர் இளைஞர்களாகவும், மருத்துவம், பொறியியல் உட்பட வெவ்வேறு துறைகளில் படித்து நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் உள்ளனர். அவர்களின் பார்வைகள், அறிவாற்றல், தொழில்நுட்ப அறிவு, முன்மாதிரி திட்டங்கள் மீதான நாட்டம் போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்தும்போது, திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர்களாக உள்ள அதிகாரிகள் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.