திருப்பூர்: உடுமலை அருகே ஜம்பலப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிராமத்தில் ஜம்பலப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் 87 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இதனை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக 10 பேர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில், சட்டப் பிரிவு 78-ன் கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, இணை ஆணையர் குமரதுரை உத்தரவின்பேரில், திருப்பூர் உதவி ஆணையர் இரா.செல்வராஜ் தலைமையிலும், இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) வி.கோபாலகிருஷ்ணன், வருவாய் துறை, காவல்துறையினர், துறை செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்கள் முன்னிலையில் கோயில் நிலத்தில் இருந்து 10 ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேற்கண்ட நிலத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்தியது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.