“உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுக-வில் என்ன நடக்கிறதென நாங்களும் பார்ப்போம்” என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும், வைத்திலிங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்டலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதினால் பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என்பது சட்டவிதி.
உட்கட்சி தேர்தலில் ஒற்றை வாக்கில் தேந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அவர்களின் பதவி காலாவதி ஆகிவிட்டது. இனி இன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளர். இனி அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் தான் அதிமுகவை வழிநடத்துவார்கள்.
இதையும் படிங்க… கேரளாவில் ராகுல் காந்தி அலுவலகம் சூறை.. சுவர் ஏறிச் சென்று அட்டூழியம் செய்த கும்பல்
அவைத்தலைவர் தேர்வு நடைபெற்றது தீர்மானத்தின் மூலமாக அல்ல. பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு அது. அந்தவகையில் தற்போதய சூழலில் அதிமுகவின் உட்சபட்ச அதிகாரம் பொருந்தியவர், அவைத்தலைவர் மட்டுமே எனவும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவை நாங்கள் மீறவில்லை. வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஓ. பன்னீர்செல்வம் பக்கம் இப்போது 40 பேர் உள்ளனர். அவர்களும் வந்துவிடுவர்” எனக் கூறினார்.
பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்தார். “திமுகவே வாரிசு அரசியலில் ஈடுபட்டுதான் வருகிறது. ஆகவே அதிமுக-வில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். திமுக-வில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம்” என சி.வி.சண்முகம் கூறினார்.
செய்தியாளர்: ஸ்டாலின்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM