உலகில் மிகவும் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் போர்த்துகலின் லிஸ்பன் நகரம் தெரிவாகியுள்ளது.
ஆயுட்காலம், வேலை நேரம், வாழ்க்கைச் செலவு மற்றும் உள்ளூர் மக்களின் நட்பு ஆகியவை நமக்கு மகிழ்ச்சியைத் தரும் மிக முக்கியமான காரணிகளாகும்.
அந்தவகையில் உலகின் மிகவும் மகிழ்வான நகரங்களின் பட்டியலை iVisa என்ற தனியார் நிறுவனம் ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளது.
அதில் லிஸ்பன் நகரம் முதலிடத்தில் தெரிவாகியுள்ளது. லிஸ்பனில் ஒரு வருடத்திற்கு 2,801 மணிநேரம் சூரிய ஒளி பிரகாசிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி ஒரு வாரத்தில் சராசரியாக 31 மணிநேரம் இங்குள்ள மக்கள் அலுவலகங்களில் செலவிடுகின்றனர்.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் பார்சிலோனா உள்ளது. இங்கு மக்கள் சராசரியாக 84 ஆண்டுகள் வாழ்கின்றனர். மேலும் பார்சிலோனா மக்கள் லிஸ்பனை விடவும் குறைவான மணிநேரமே வேலை செய்கிறார்கள் (வாரத்திற்கு 30 மணிநேரம்) மேலும் வாழ்க்கைச் செலவு தரவரிசையில் 40 இல் 11 வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பாவின் மிகவும் பழமையான தலைநகரமாக அறியப்படும் ஏதென்ஸ் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஐரோப்பாவின் முதன்மை நகரங்கள் இந்த தரவரிசையில் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
மேலும் ரோம் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களும் முதல் 10 இடங்களுக்குள் தெரிவாகியுள்ளன.
சிட்னி, ரொறன்ரோ, சான் ஜோஸ், இஸ்தான்புல் மற்றும் பாங்காக் ஆகிய நகரங்கலும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.