சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து கரும்பை எடுத்துத் தின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் பாரம் ஏற்றி அடர்ந்த வனப்பகுதி சாலை வழியாக சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பகல் நேரங்களில் காட்டுயானைகள் வனப்பகுதி சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பை பறித்து தின்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை காட்டு யானை; லாரியில் இருந்த கரும்புகளை பறித்து தின்றபடி வெகு நேரம் சாலையில் நின்றிருந்தது.
இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானை கரும்பை பறித்துத் தின்னும் காட்சியை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
கரும்புத் துண்டுகளை தின்று பசியாறிய பின் காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM