1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கிய உலகில் மதிப்புமிக்க விருதாகப் பார்க்கப்படும் இவ்விருது பல மொழிகளில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளில், சிறந்த நூல்களுக்கான விருதுகளை வழங்கிவருகிறது.
சாகித்ய அகாதமி விருதுடன், சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது. மேலும் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான விருதும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2021-ம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது தமிழின் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான மாலனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய ‘ Chronicle of a Corpse Bearer’ என்னும் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்’ நூலுக்காக இந்த விருதை பெறுகிறார் மாலன். இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக சிலரும், மற்றொருபுறம் மாலன் சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை இருந்துவருகிறார் அவருக்கு விருது வழங்கியது சர்ச்சைக்குரிய முடிவு என எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.