மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத நிலையில் சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அஸ்ஸாமில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கு பாஜக மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது எனக் கூறப்பட்டு வந்தது. இதற்கு முன்பு மூன்று முறை மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க முயன்று பாஜக தோல்வி அடைந்தது. இதனால் இம்முறையும் அது போன்று தோல்வி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாஜக தலைவர்கள் நேரடியாக களம் இறங்காமல் மறைமுகமாக உதவி செய்து வருகின்றனராம்.
இது குறித்து ஏக்நாத் ஷிண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “ஒரு தேசிய கட்சி எங்களது நடவடிக்கையை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளது. அதோடு எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்த தேசிய கட்சி செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். அதோடு ஷிண்டேயை எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தலைவனாக ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்வது போன்றும் வீடியோவில் இருக்கிறது.
அதேசமயம் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வரும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா அளித்துள்ள பேட்டியில், “அஸ்ஸாமில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கின்றனரா என்று எனக்கு தெரியாது” என்று தெரிவித்துள்ளார். அதோடு, `அஸ்ஸாமில் அதிகமான நல்ல ஹோட்டல்கள் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வந்து தங்கலாம். அதில் எந்த வித பிரச்னையும் கிடையாது. மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் இங்கு தங்கி இருக்கின்றனரா என்று எனக்கு தெரியாது. ஆனால் மற்ற மாநில எம்.எல்.ஏ.க்கள் அஸ்ஸாமில் வந்து தங்கலாம்’ என்று தெரிவித்தார். மேலும் சிவசேனா தங்களது எம்.எல்.ஏ.க்களை கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, ஏக்நாத் ஷிண்டெ அணியினர் விமானத்தில் எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
இதற்கிடையே சிவசேனா தங்களது கட்சியின் சட்டமன்ற தலைவராக நியமித்த அஜய் சவுத்ரிக்கு துணை சபாநாயகர் நர்ஹரி ஒப்புதல் கொடுத்திருக்கிறார். சட்டமன்றத்தில் ஓரிரு நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி ஆளுநர் பகத்சிங் கொஷாரியா அரசுக்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கவிழ்ந்துவிடும் என்று கருதி முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லத்தை காலி செய்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.