“அ.தி.மு.க., என்ற கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமை வேண்டும். கூட்டு தலைமை வேண்டும். எங்கள் கட்சிக்குள் நடக்கிற விவகாரங்களில் சசிகலாவை தொடர்புபடுத்தி பேச வேண்டாம்!” என தஞ்சாவூரில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை குறித்து மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பொதுக்குழுவும் சர்ச்சையில் முடிந்தது. அப்போது துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், “சதிகாரர்கள் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார்கள்!” என ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறினார். பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பு டெல்லி விரைந்திருக்கிறது.
இந்த நிலையில், இன்று சென்னையிலிருந்து தஞ்சாவூர் வந்த வைத்திலிங்கத்துக்கு மேலவஸ்தாசாவடி பகுதியில் அவரின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
`சோழநாட்டின் தங்கமே, தனியாக கர்ஜித்த சிங்கமே!’ என தொடர் கோஷமிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட டூவிலர்கள், கார்களில் ஊர்வலமாகச் செல்ல அங்கிருந்து ரயிலடி எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலுக்குச் சென்றார் வைத்திலிங்கம். அங்கு எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் ஆளுயர மாலையை அணிவிப்பதற்காக ரெடி செய்திருந்தனர் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், அதை கவனிக்காமல் காருக்குள் இருந்தபடியே ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார் வைத்திலிங்கம்.
பின்னர் மாலையை ஜே.சி.பி-யிலிருந்து கழட்டி எடுத்துச் சென்று அணிவித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைத்திலிங்கம், “சட்டத்துக்குப் புறம்பாக நிறைவேற்றபட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தோம். நீதிமன்றம் 23 தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும். மற்றவை குறித்து விவாதிக்கலாம். ஆனால் நிறைவேற்றக் கூடாது எனக் கூறியிருக்கிறது.
அதை மீறி அவர்கள் செயல்பட்டனர். இதனால், அவர்கள் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியாகாது. ஓ.பி.எஸ்., டெல்லிக்கு ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுத்தாக்கலில் கலந்துகொள்வதற்காக கூட்டணி கட்சி சார்பில் சென்றுள்ளார். பி.ஜே.பி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரையும் சந்தித்தனர். தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ்., செல்லவில்லலை.
அ.தி.மு.க., என்ற கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஜெயலிலதா ஆசைப்படி அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும். கட்சியில் ஒற்றுமை வேண்டும். கூட்டு தலைமை வேண்டும். எங்கள் கட்சிக்குள் நடக்கிற விவகாரங்களில் சசிகலாவை தொடர்புபடுத்தி பேசவேண்டாம்” என்றார்.