சென்னை: பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தல் மேலாண்மைக் குழு உறுப்பினர் சி.டி.ரவி ஆகியோர் நேற்று சந்தித்து ஆதரவு கோரினர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்கடந்த 2017 ஜூலை 25-ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக் காலம் வரும் ஜூலை24-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, வரும் 29-ம் தேதி வரை நடக்கிறது.
பாஜக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணிவேட்பாளராக ஒடிசா மாநில முன்னாள் பாஜக அமைச்சரும், ஜார்க்கண்ட் மாநிலமுன்னாள் ஆளுநரும், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருமான திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ்அதிகாரியும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியுள்ளன.
இந்த குடியரசுத் தலைவர் தேர்தல், 2024-ல்நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன. அதனால் பாஜகவுக்கு தோல்வி பயத்தைக் காட்டும் வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுகவில் 66 எம்எல்ஏக்கள், ஒரு மக்களவை எம்.பி., 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் என கணிசமான அளவில்மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளதால், அதிமுகவின் ஆதரவைப் பெறுவதில் பாஜக தீவிரமாக உள்ளது.
கடந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் பாஜக ஆதரவு அளித்தது. அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவு கோர பாஜக தலைமை திட்டமிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, குடியரசுத் தலைவர் தேர்தல் பணிக்கான மேலாண்மைக் குழு உறுப்பினர் சி.டி.ரவி, பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
ஓபிஎஸ் உடனான சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
இபிஎஸ் உடனான சந்திப்பின்போது, முன்னாள் எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த முறை அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்து, இருவரையும் சேர்த்துவைத்தார். அதேபோல இப்போதும் அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கட்சியினர் மத்தியில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘இந்த சந்திப்பு முழுக்க முழுக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கோருவதற்காக நடந்தது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.