சென்னையில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதால் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் சிக்கியதும் தங்கையை டாக்டர் ஆக்குவதற்காக திருடியதாக கூறி அனுதாபம் தேட முயன்ற சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை ராயப்பேட்டை கோபாலபுரம் தனியார் பள்ளி அருகே கடந்த 15 ந்தேதி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்தவர்கள் செல்போனை பறித்துச்சென்றனர்.
அதே இடத்தில் 18 ந்தேதி முதியவர் ஒருவரிடம் இதே போன்று செல்போன் பறித்துச்செல்லப்பட்டது.
இதே போல அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போன் பறித்துச் சென்றனர்.
அடுத்தடுத்த தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களை தடுக்க விசாரணை யை முன்னெடுத்த ராயப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், சம்பவ இடங்களில் பொறுத்தப்பட்டிருந்த 42 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 16 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் கும்பலை பிடித்தனர்.
பள்ளி செல்லும் போதே கூடா நட்பால் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதால் அந்த சிறுமியை பெற்றோர் வீட்டில் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டி விட்டுள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறி தேனாம் பேட்டை கஞ்சா குடுக்கி விவேக்குடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கி இருந்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சென்னை பார்த்தசாரதி கோவில் பிளாட்பார்ம் ஜெகன், சிதம்பரம் ஜெகதீசன், தூத்துக்குடி சண்முகபுரம் சரவணபெருமாள் ஆகியோரை ஒருங்கினைத்து சென்னைக்கு வரவழைத்து இந்த செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
பறிக்கப்பட்ட செல்போன்களை விற்று கிடைக்கின்ற பணத்தில் கஞ்சா வாங்கி புகைத்து பொழுது கழித்தாலும், அந்த சிறுமி மட்டும் தனது பங்கு தொகையில் உள்ள பணத்தை பள்ளி செல்லும் தனது தங்கைக்கு வழங்கி வருவதாகவும், தனது தங்கையை டாக்டர் ஆக்குவதற்காகவே தொடர் திருடில் ஈடுபட்டதாகவும் கூறி தனது களவாணி தனத்துக்கு அனுதாபம் தேட முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 166 செல்போன்கள், ஒரு ஆப்பிள் ஐ பேடு, 2 பைக்குகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 இளைஞர்களையும், அந்த 16 வயது சிறுமியையும் கைது செய்தனர்.
போதையை தேடிச்சென்றால் வாழ்க்கையில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு சான்று.