பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் முதுமக்கள் தாழி உள்ளிட்ட ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்ட பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தில் 26 ஏக்கர் பரப்பளவில், புதிய கற்காலத்தைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த புதைவிடம் இருப்பதை இந்திய தொல்லியல் துறை கண்டறிந்து, அதைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக 26.6.1946 அன்று அறிவித்துள்ளது. மேலும், அந்த இடத்தில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னம் என அறிவிப்புப் பலகையும், இரும்புக் கம்பிகளால் ஆன வேலியும் அமைத்து பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டு, அதில் கிடைக்கும் சான்றுகளை கார்பன் கணக்கீடு செய்து, இங்கு வாழ்ந்த தொன்மையான மனித நாகரிகத்தின் காலத்தைக் கணித்து, அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் வெளியுலகுக்கு தெரிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஊரகத் துறை அலுவலரும், ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ எனும் நூலின் ஆசிரியருமான ஜெயபால் ரத்தினம், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
இந்திய தொல்லியல் துறை தமிழகத்தில் கண்டறிந்துள்ள தொன்மையான பகுதிகளில், இந்த புதைவிட பகுதியும் ஒன்று. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் காணப்படும் ஒரே தொன்மையான புதைவிடமும் இதுதான்.
26 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த புதைவிடத்தில், 13 ஏக்கர் அரசுக்குச் சொந்தமான நிலத்திலும், 13 ஏக்கர் தனியாரிடமும் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், கல் திட்டைகள் உட்பட பல்வேறு ஈமச் சின்னங்கள் காணப்படுவதால், அவை பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்படுத்தப்பட்டவை என அறிய முடிகிறது.
இங்கு இடுகாடு மட்டுமே 26 ஏக்கர் பரப்பளவில் இருந்திருக்கிறது எனில், மனிதர்களின் வாழ்விடமும் இதைவிட பல மடங்கு அதிக பரப்பளவில் இருந்திருக்க வேண்டும். பழங்கால பண்பாட்டுச் சான்றுகள் பெரும்பாலும் இதுபோன்ற புதைவிடங்களில் இருந்தே கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல, இந்த புதைவிடமும் ஏராளமான கற்கால பண்பாட்டுச் சான்றுகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கலாம்.
எனவே, இங்கு அகழாய்வு செய்தால், இப்பகுதியிலும் மிகவும் தொன்மையான மனித நாகரிகம் வாழ்ந்ததற்கான சான்றுகள், தரவுகள் கிடைக்கும். அந்தச் சான்றுகளை கார்பன் கணக்கீடு செய்து, நாகரிகத்தின் காலத்தைக் கணக்கிட்டு, அறிவியல்பூர்வமாக வெளியுலகுக்கு அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரின் குன்னம் தொகுதிக்குள் இந்த புதைவிடம் அமைந்துள்ளதால், அவர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கற்கால நாகரிகத்துக்குச் சான்றாக செங்குணம், எளம்பலூர், பெரியம்மாபாளையம், புது நடுவலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கிடைத்தச் சான்றுகள், நமது அறியாமையால் பாதுகாக்கப்படாமல் அழிந்துவிட்டன.
அதேபோல, காரையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புதைவிட பகுதியில் கால்நடைகள், மனிதர்களின் நடமாட்டம் சர்வசாதாரணமாக உள்ளது. இதனால், தொன்மை வாய்ந்த ஈமச்சின்னங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. எனவே, இவற்றை சிதையாமல் பாதுகாக்கவும் தொல்லியல் துறையினர் ஏற்பாடுசெய்யவேண்டும் என்றார்.