குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனு டிஸ்மிஸ்!

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், ரயிலில் பயணித்த 59 கர சேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மதக்கலவரம் வெடித்தது.

அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கலவரக்காரர்களால் வெட்டி எரிக்கப்பட்டனர். மேலும், இந்தக் கலவரத்தில் 3 நாட்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு ஏறத்தாழ கலவரம் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ம் ஆண்டு தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த
மோடி
உள்ளிட்ட 63 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலவரம், அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையை உள்ளடக்கிய ஒரு பெரிய சதி என்றும், இது குறித்து புதிதாக விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும் கலவரத்தில் போது உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. எஹ்சன் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இம்மனு விசாரணைக்குத் தகுதியற்றது எனக் கூறித் தள்ளுபடி செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.