தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அவரது வேட்புமனுவை பிரதமர் மோடி முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முர்முவுக்காக நான்கு வேட்புமனுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் தேர்தல் விதிப்படி 50 பேர் முன்மொழியவும், 50 பேர் வழிமொழியவும் வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் பி.சி.மோடியிடம் முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்வார்.
இந் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஐக்கிய ஜனதாதளம், அப்னாதள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஒடிசாவில் இருந்து டெல்லி வந்த முர்மு, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தலைவர் நட்டா ஆகியோரையும் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.